காஷ்மீர் ஓர் பார்வை-2
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14,15 தேதிகள் இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் இரண்டு தனித்தனி நாடுகள் சுதந்திரம் அடைந்தன. இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் அப்போது இருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை – ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்த பிரதேசங்களை என்ன செய்வது?
”இந்தியப் பகுதிதியிலுள்ள சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையலாம். பாகிஸ்தான் பகுதியிலுள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணையலாம்” என்று சொல்லி விட்டார். பிரிட்டிஷ் அரசின் கடைசிப் பிரிதிநிதி மவுண்ட்பேட்டன். அதன்படி பெரும்பாலான சமஸ்தானங்கள் இணைந்து விட்டன.
ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடுவில் அமைந்த விட்ட ஜம்மூ-காஷ்மீர் சமஸ்தானம் எந்த நாட்டுடன் இணைவது?
ஜம்மு-காஷ்மீரின் அன்றைய மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள் என்பதால் பாகிஸ்தானுடன் இணைவதா? அல்லது ஜம்மு-காஷ்மீரின் ராஜா ஹரிசிங் ஒரு இந்து என்பதால் இந்தியாவுடன் இணைவதா?
”எந்த நாட்டுடனும் இணையமாட்டேன். ஜம்மு-காஷ்மீர் தனிநாடாக, சுதந்திர நாடாக விளங்கும்”
”அது சரிதான்.. ஆனால் இங்கு மக்கள் ஆட்சிதான் நடக்க வேண்டும். மன்னராட்சிக்கு இடமில்லை மன்னனே வெளியேறு” என்று சிறையிலிருந்து ஒரு குரல். காஷ்மீர் சிங்கம் என்று ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட ஷேக் அப்துல்லாஹ் தான் அந்தச்சிறைப்பறவை.
மறுபுறம் ஜம்மு-காஷ்மீரை தமது நாட்டுடன் இணைப்பதற்கு ராஜாவை சம்மதிக்கச் செய்ய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தானின் ஜெனரல் ஜின்னாவும் படு தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் இப்படி இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று பாகிஸ்தான் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது ரகசியமாக.
பாகிஸ்தான் பதான் வகுப்பைச் சேர்ந்த போர் குணமுள்ள பழங்குடியினருக்கு ஆயுதம் அளித்து காஷ்மீரைக் கைப்பற்ற ஏவி விட்டது. பாகிஸ்தான் அரசு அவர்களை வழி நடத்திச் செல்ல ராணுவ வீரர்களும் அவர்களுடன் அனுப்பப்பட்டனர். தலை நகரான சிரீநகரை நோக்கி அனைவரும் விரைந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பான அணிவகுப்புப் புறப்பட்டு 48 மணி நேரம் கழித்த பிறகுதான் இந்திய அரசுக்கு இது பற்றியத் தகவல் கிடைத்தது. பிரதமர் நேரு துரிதமாக முடிவெடுத்தார் இந்திய அதிகாரி வி.பி.மேனன் டெல்லியிலிருந்து விமானத்தில் பறந்து சிரீநகரை அடைந்தார்… ராஜா ஹரிசிங்கைச் சந்தித்தார்.
”பாகிஸ்தானின் படை வந்து கொண்டிருக்கிறது என்ன செய்யப் போகிறீர்கள்?”
”நீங்கள் சொல்வதைச் செய்கிறேன், என்னைக் காப்பாற்றுங்கள்”
”ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு நீங்கள் சம்மதித்தால், உங்களை இந்திய அரசு காப்பாற்றும்”
”சம்மதிக்கிறேன்”
”சரி ஜம்மு நகரில் உள்ள உங்களது குளிர்கால அரண்மனைக்கு நீங்கள் உடனே சென்று விடுங்கள். நான் டெல்லிக்கு சென்றுவிட்டு, ஜம்மு நகருக்கு நாளை வருகிறேன்” வி.பி. மேனன் டெல்லிக்குப் பறந்தார்.
ராஜா ஹரிசிங் ஜம்மு நகருக்கு விரைந்தார் – நூற்றுக் கணக்கான வண்டிகள் புடைசூழ. அந்த வண்டிகளில் தங்கமும், வைரமும் வைடுரியமும் நிரம்பி வழிய ஆயுதமேந்திய மெய்க் காவலர்கள் முன்னும் பின்னும் அணிவகுக்க! டெல்லிக்குச் சென்று வி.பி.மேனன் நேருவை சந்தித்து விட்டு, உடனே ஜம்மு நகருக்கு மீண்டும் பறந்து வந்தார். ராஜா ஹரிசிங்கிடம் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டினார். ராஜா ஹரிசிங் கையெழுத்திடடார்.
”ஜம்மு காஷ்மீர் ராஜ்யத்தை ஆளும் சிரீமான் இந்திர மஹேந்திர ராஜ ராஜேஸ்வர மஹா ராஜாதி ராஜ சிரீ ஹரிசிங் ஆகிய நான், எனது ராஜ்யத்தை இந்தியாவுடன் இணைக்கிறேன். ராணுவம், வெளிநாட்டு உறவு, தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இந்திய அரசின் முழு அதிகாரத்தை ஏற்கிறேன் என்பதை இதன் மூலம் அறிவித்து ஒப்பந்தம் செய்கிறேன்.
ஹரிசிங்
மஹா ராஜாதி ராஜா
ஜம்மு – காஷ்மீர் ராஜ்யம் ஒப்பந்தப் பத்திரம் டெல்லிக்குச் சென்றது. இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் கையெழுத்திட்டார்.
”இந்த ஒப்பந்தத்தை நான் ஏற்கிறேன்..”
மவுண்ட்பேட்டன்
கவர்னர் ஜெனரல்
இந்தியா
நாள்: 1947 அக்டோபர் 27
அன்றே இந்தியப் படைகள் சிரீநகர் சென்றன, சண்டை நடந்தது. போர் பிரகடனம் செய்யாமலேயே பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்துடன் போரிட்டது. போர் நடந்து கொண்டிருந்தபோதே 1948ம் ஆண்டு ஜனவரி 1ல் இந்திய அரசு ஐ.நா. சபையில் முறையிட்டு மனு அளித்தது.
பாகிஸ்தானிலிருந்து ஆயுதமேந்திய பலர் ஜம்மு – காஷ்மீருக்குள் ஊடுருவி ஆக்ரமிக்க முயன்றார்கள். இதைத் தடுக்க ராணுவ உதவி செய்யுமாறும் ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்குமாறும் ராஜா ஹரிசிங் இந்தியா அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். ஜம்மூ காஷ்மீரின் மிகப் பெரிய கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ்வும் வேண்டுகோள் விடுத்தார். எனவே ஜம்மு – காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அனுமதிக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் இந்தியா அரசு முடிவு செய்தது.
எனினும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிய உடனே, இணைப்புத் தொடர்பாக சர்வதேச மேற்பார்வையின் கீழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி மக்களின் தீர்ப்பை ஏற்போம் என்றும் இந்திய அரசுத் தெளிவாக அறிவித்தது. எனவே ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தானின் தலையீட்டை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இந்தியா அரசு தனது மனுவில் கூறியது.
இதையடுத்து 1948 ஏப்ரல் மாதம் 21 அன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜம்மு – காஷ்மீரில் மக்கள் கருத்தை அறிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா சபையின் விஷேஷக் கமிஷன் செய்ய வேண்டுமென்றும் தீர்மானம் கூறியது. கமிஷன் உறுப்பினர்கள் இரு அரசுகளுடனும் பேசி பேச்சு வார்த்தை நடத்திப் பல தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.
அதன்படி, 1949 ஜனவரி 1ம் தேதி முதல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.. ஜம்மு – காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் பழங்குடியினர் வெளியேற வேண்டும்.. அதையடுத்து பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவத்தினரின் பெரும் பகுதி வாபஸ் ஆகவேண்டும்.. அதன் பிறகு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தப்படும். என்று அந்தத் தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி போர் நிறத்தம் மட்டும் ஏற்பட்டது, போர் நிறுத்த எல்லை வகுக்கப்பட்டது. ஆனால் தீர்மானத்தின் மற்ற அம்சங்கள் இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை. போர் நிறுத்த எல்லைக் கோட்டுக்கு வடக்கில் உள்ள காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசமும், தெற்கில் உள்ள பகுதி இந்திய வசமும் நீடித்து வருகின்றன. வடக்கில் உள்ள பகுதி ‘பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் உள்ள காஷ்மீர்’ (P O K -pakistan Occupied kashmir) என்று குறிப்பிப்படுகிறது.
அந்தப்பகுதியை ‘சுதந்திரக் காஷ்மீர்’ என்று பாகிஸ்தான் குறிப்பிட்டு அங்கு ஒரு பொம்மை அரசையும் பாகிஸ்தானே அமைத்து நடத்தி வருகிறது.
இந்தியப் பகுதியில் உள்ள ஜம்மு – காஷ்மீரில் 1947ம் ஆண்டில் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதாக ராஜா ஹரிசிங் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 1953ம் ஆண்டுவரை ஜம்மு – காஷ்மீர் பிரதமராக ஷேக் அப்துல்லாஹ் நீடித்தார். அநேகமாக இந்தியாவிலேயே முதன் முறையாக நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வந்து உபரி நிலங்களை நஷ்டஈடு இன்றிக் கைப்பற்றி ஏழைகளுக்கு வழங்கினார் அவர்.
எனினும், அவ்வப்போது காஷ்மீரின் ‘சுதந்திரம்” பற்றிப் பேசியது இந்திய அரசுக்கு அச்சத்தைக் கொடுத்தது.
திடீரென்று ஒருநாள், 1953 ஆகஸ்ட் 7 இரவு ஷேக் அப்துல்லாஹ் கைது செய்யப்பட்டு சிறையிலிடப்பட்டார்! ஜம்மு காஷ்மீரின் துணைப் பிரதமர் பக்ஷிகுலாம் முகம்மது பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார்.
ஓரிரு முறை விடுதலையானலும் மீண்டும் மீண்டும் ஷேக் அப்துல்லாஹ் சிறையிலிடப்பட்டார்.
சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விடுதலை செய்து, காஷ்மீரின் முதலமைச்சராக்கினார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. ஷேக் அப்தல்லாஹ்வின் மரணத்துக்குப் பின் அவரது மகன் ஃபருக் அப்துல்லாஹ் முதலமைச்சரானார். அவரது மைத்துனர் குலாம் முகம்மது ஷாவைக் கொண்டே ஃபருக் அப்துல்லாஹ்வைக் கவிழ்த்து குலாம் முகம்மது ஷாவை முதலமைச்சராக்கினார் இந்திரா காந்தி!
இது போன்ற அலங்கோலங்கள் ராஜீவ் காந்தி ஆட்சியிலும் தொடர்ந்தன.
வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஜம்மு – காஷ்மீரில் தொடங்கிய கவர்னர் ஆட்சி இப்போது ஜனாதிபதி ஆட்சியாகத் தொடர்ந்து நீடிக்கிறது இதனால் ஜம்மு – காஷ்மீரின் மக்கள் வெறுப்படைந்து வந்தார்கள். மக்களின் ஆதரவைப் பெறாத ஆட்சியாளர்கள் சகிக்க முடியாத ஊழல் முடை நாற்றம், விவசாயம், தொழில் நசிவு, வறுமை, வேலையின்மை அதிகரிப்பு, போராட்டங்கள் மீது அடக்குமுறை-
-தீவிரவாதம் வளர்ந்தது, வலுப்பெற்றது!
தீவிரவாதத்தை ஒடுக்க அரசுக்குத் தெரிந்த ஒரே வழி ராணுவ அடக்குமுறை!
விளைவு! ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டால் பத்து தீவிரவாதிகள் உருவாகிறார்கள்.
அடக்கு முறையையும், சித்ரவதையையும் அனுபவிக்கும் மக்கள் நாளுக்கு நாள் தீவிரவாதிகளின் பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள், அடக்கு முறையும் அதிகரித்து வருகிறது.
இதற்குத் தீர்வுதான் என்ன?
ராணுவ நடவடிக்கை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முயலும் போக்கை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். தீவிரவாதிகள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் அரசு உடனடியாகப் பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும். இது மட்டுமே தீர்வுக்கான உண்மையான தொடக்கமாக அமையும்.
இரா.ஜவஹர்
நன்றி: ஜுனியர் போஸ்ட் 30.10.1992
Source : http://www.islamkalvi.com/portal/?p=436
I QUITE AGREE WITH THIS LINES ABOVE.
ReplyDelete//ராணுவ நடவடிக்கை மூலம் பிரச்சனையைத் தீர்க்க முயலும் போக்கை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும். தீவிரவாதிகள் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் அரசு உடனடியாகப் பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும். இது மட்டுமே தீர்வுக்கான உண்மையான தொடக்கமாக அமையும்.//